வியாழன், பிப்ரவரி 25, 2010

பணம் பணமறிய அவா

அன்னை தேசத்து
அகதிகள் நங்கள்
எண்ணெய் தேசங்களில்
எரிந்து கொண்டிருக்கிறோம்!

அடிவயிற்றில் பதிந்த
வறுமைக் கோடுகளின்
மர்மக் கரங்கள்
அறுத்தெரிந்து வீசிய
ஜீவனுள்ள
மாமிசத் துண்டுகள் நாங்கள்!

கண் தெரியா தேசத்தில் விழுந்து
காயங்கள் தலை சாய்த்துக்
கண்ணீர் வடிக்கிறோம்!

மொத்தக் குடும்பத்தையும்
முதுகில் சுமந்து
இன்னும் தீர்மானிக்கப்படாத்
திசைகளில் தொடர்கிறது
நம் பயணம்!

ஒவ்வொரு முறையும்
நலம் நலமறிய அவா
என்றுதான் கடிதம் எழுதுகிறோம்!
பணம் பணமறிய அவா
என்றல்லவா பதில் வருகிறது!

நமக்கு மட்டும் ஏன்
பணம்
பந்த பாசங்களின்
சமாதியாகிவிட்டது?

ஒரு டெலிபோன் கார்டிலும்
ஒரு பொட்டலம் பிரியாணியிலும்
முற்றுப்பெற்றுவிடுகிறது
நம் பண்டிகை நாட்கள் ஒவ்வொண்றும்.....

உயிரை பிழிந்து பிழிந்து
பாசத்தால் ஒத்தடம் தந்த
உறவுகளைப் பிரிந்து
இன்னும் எத்தனை நாட்கள்
இந்த ஏகாந்த வாழ்கை?

கலவரத்தில்
கைக் குழந்தையைத் தொலைத்த
தாயின் பதற்றத்தைப்போல்தான்
ஒவ்வொரு முறையும் போன் பேசிய
பின்னால் அடையும் அவஸ்தைகள்......

நம்மில் பலருக்கு
தாம்பத்திய வாழ்க்கைகூட
தவணை முறையில்தான்
தட்டுப்படுகிறது.....

தொலைபேசியிலும்
தபாலிலும்
கொஞ்சலும், சிணுங்கலுமாய்...
இன்ஸ்டால்மெண்டில்
இல்லறம் நடக்கிறது...

மனைவியின்
மூச்சுக் காற்று தந்த சுகம்கூட
இந்த ஏசி காற்று தருவதில்லை!

குடும்ப விளக்குகளை
கும்மிருட்டில் தவிக்கவிட்டு விட்டு
தீக்குச்சிகள் நாம்
தன்னந்தனியாய்
இந்தத் தீவுகளில்...

வீடுகூடும் நிஜம் தொலைத்து
ஒரு வீடு கட்டும் கனாவில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இந்த பாலைப் பிரதேசங்களில்?...

உயிரோடு இருக்கும்
பெற்ற குழந்தைக்கு
புகைப் படத்தில்தான்
கொடுக்க முடிகிறது
செல்ல முத்தங்கள்!

என்ன இருந்தாலும்
காகிதங்கள் உணருமா
பாசத்தின் ருசி

ஒவ்வொரு முறையும்
ஊர் சென்று திரும்பும்போது
மறக்காமல் எல்லாவற்றையும்
எடுத்து வர முடிகிறது
மனசைத் தவிர...!

காலத்தின்
இந்த பசை தடவல்கள்
நம்மை கட்டிப்போடாமல்
வெறும் கடிதம் போடத்தானா?

பாலைவன ஜீவன்கள் நாம்
தாகத்தோடு காத்திருக்கின்றோம்!
தண்ணீருக்காக அல்ல
தபால்களுக்காக....

வாழ்க்கையின் பாதி
விரக்தியிலும், விரகத் தீயிலும்
எரிந்துபோகும் நம் வாலிப வாழ்க்கை
கடைசியில் நரம்புகள் அறுந்துபோய்
முகாரி பாடும் வீணைகளாய்...


என்ன சொல்லி
என்ன பயன்
தண்ணீரில் மீன் அழுதால்
கண்ணீரைத்தான் யார் அறிவார்?

3 கருத்துகள்:

goma சொன்னது…

இந்த கவிதையை வாசித்த பின் ,
அயல்நாடு அமெரிக்கா,டாலர்,என்பதை மட்டுமே கனவுகளாய் பாடப் புத்தகத்துக்குள் முகம் புதைந்து கிடக்கும் இளைய தலைமுறைகளில் ஒன்றிரண்டு பேராவது சிந்திக்கத் தொடங்கினால் போதும்.

S Maharajan சொன்னது…

உண்மை தான் goma
நீங்கள் சொல்வது
ஆனால் எண்ண செய்வது குடும்ப சுமை முதுகில் தாங்க வேண்டி உள்ளதே!

S Maharajan சொன்னது…

Hi smaharajan,

Congrats!

Your story titled 'பணம் பணமறிய அவா' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th February 2010 04:28:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/192492

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish Team

ஒட்டு போட்டு பாப்புலர் ஆக்கிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி

கருத்துரையிடுக